கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL 303 ரக விமானம் தாழ்வாக பறந்தமையினால் ஏற்பட்ட காற்றில் கட்டான பிரதேசத்தில் சுமார் 50 வீடுகள் சேதமடைந்தன.
சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த விமானத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் இடம்பெற்று 3 மாதங்கள் கடந்துள்ள போதிலும், சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, வீடுகள் மற்றும் உடைமைகள் சேதமடைந்த பிரதேசவாசிகள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றிணைந்து நட்டஈடு வழங்குமாறு கோரி கட்டுநாயக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு முன்பாக நேற்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,’காலநிலை காரணமாக இது நடந்தது என்று கடிதம் அனுப்புகிறார்கள். அப்போது எங்கள் பகுதியில் காற்று இல்லை என்று வானிலை அறிக்கைகள் கூறுகிறது. காத்திருக்க நேரமில்லை. நாங்கள் ஏழைகள். எங்களுக்கு இழப்பீடு வேண்டும்’ என மக்கள் தெரித்துள்ளனர்.