மக்களவை அத்துமீறல் வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் டிஎஸ்பி ஒருவரின் மகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவாதம் நடைபெற்ற போது பார்வையாளர் மாடத்தில் இருந்து சிலர் கீழே குதித்து அத்து மீறல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது லக்னோவை சேர்ந்த சாகர் ஷர்மா, மைசூருவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் வண்ண புகை குப்பிகளை வீசினர். இவர்களை ஆதரித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்ட ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகியோர் முழக்கம் எழுப்பினர். இந்த நால்வரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் லலித் மோகன் ஜா, மகேஷ் குமாவத் ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரியவந்ததையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாய் கிருஷ்ணாவை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பாகல்கோட்டையின் முன்னாள் துணை காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜகலியின் மகன் தான் கிருஷ்ணா என்பது தெரிய வந்தது. இவர் நாடாளுமன்றத்தில் வண்ணப் புகை குப்பியை வீசிய மனோரஞ்சனின் நண்பராவார்.இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக இருவரும் ஆலோசித்துள்ளனர்.
இதே வழக்கில் உத்தரப் பிரதேச மாநிலம் ஜலாவுனை சேர்ந்த அதுல் குல்ஸ்ரேஸ்தா என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் பகத் சிங்கின் சித்தாந்தத்தை பின்பற்றும் லலித் மோகன் ஜா ஆதரவாளர் என்பதுடன், டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.உ.பி. ஜலாவுனை சேர்ந்த அதுல் குல்ஸ்ரேஸ்தா என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.