போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தற்போது புது சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் விளையாடிய முக்கிய ஆட்டத்தில் ரொனால்டோ வெளியே உட்கார வைக்கப்பட்டார்.
எனினும் நாக் அவுட் சுற்றில் அணி தோல்வி தழுவிய நேரத்தில் கடைசியாக விளையாட அனுமதிக்கப்பட்டார் . ரொனால்டோவால் அப்போது எதுவும் செய்ய முடியாததால் போர்ச்சுக்கல் அணி தோல்வி பெறுவதை அவரால் தடுக்க முடியவில்லை. இதன் காரணமாக ரொனால்டோ உலக கோப்பையை வெல்ல முடியாத விரக்தியுடன் வெளியேறினார். மேலும் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அங்கிருந்து வெளியேறினார்.
எனினும் நடப்பதெல்லாம் நல்லதுக்கே என்பது போல், ரொனால்டோ உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறார். சவுதி அரேபியாவில் உள்ள அல் நசார் என்ற கால்பந்து அணி ரொனால்டோவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1700 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளது. இதன் காரணமாக ரொனால்டோ சவுதி அரேபியாவில் விளையாட ஒப்புக்கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி வந்த ரொனால்டோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும் அல் நசாரின் விளையாடும் ஆட்டத்தில் ரொனால்டோ பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் விளையாடிய போது நடத்தை விதிகள் மீறியதன் காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் தடை விதித்து இருக்கிறது. இதனால் ரொனால்டோ அல் நசார் அணிக்கு களமிறங்கவில்லை.
ஆனால் தற்போது ரொனால்டோவுக்கு ஏற்பட்டிருப்பது பெரிய சிக்கல். காரணம் சவுதி அரேபியாவில் திருமணம் ஆகாமல் யாரும் ஒரே அறையில் தங்க கூடாது. இது அந் நாட்டு சட்ட விதிகளுக்கு எதிரானது. தற்போது ரொனால்டோ அவருடைய காதலியான ஜார்ஜினா உடன் திருமணம் ஆகாமல் உறவில் இருக்கிறார். இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை. தற்போது சவுதியில் இரண்டு ஆண்டுகள் விளையாட இருக்கும் ரொனால்டோ தனது காதலியுடன் தங்குவது சட்டவிரோதமாக கருதப்படும்.
இதனால் ரொனால்டோ என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் பணமா காதலியா சிறையா என்ற சிக்கலுக்கு ரொனால்டோ தள்ளப்பட்டுள்ளார். எனினும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அல் நசார், ரொனால்டோ வெளிநாட்டு வீரர் என்பதால் சவுதி அரேபியாவின் சட்டம் அவருக்கு பொருந்தாது. மேலும் ஏதேனும் குற்றச்செயல் நடந்தால் மட்டுமே சவுதி அரேபியாவின் சட்டம் படி தண்டனை கிடைக்கும். இதனால் ரொனால்டோவுக்கு சிக்கல் இல்லை என்று கூறப்படுகிறது.