அக்குரஸ்ஸ கடற்கரையில் (13) பிற்பகல் நீராடச் சென்ற போது அடித்துச் செல்லப்பட்ட மாணவனின் சடலம் (14) கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த மாணவனுடன் மேலும் இரு மாணவர்களும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன் ஏனைய இருவரையும் பிரதேசவாசிகள் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இரு மாணவர்களும் பலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
புத்தாண்டு விடுமுறைக்காக நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாக வீடுகளுக்குத் தெரிவித்துவிட்டு மூன்று மாணவர்களும் கடலில் குளிக்கச் சென்று கொண்டிருந்த போது திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.