புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கர்ப்பிணி உடலை வீட்டு முன் புதைத்த விவகாரத்தில் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்னவாசல் அருகே கடந்த 29ம் தேதி 8 மாத கர்ப்பிணி நாகேஸ்வரி குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் நாகேஷ்வரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, நாகேஸ்வரி தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் தங்கமணி, மாமியார் விஜயா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 3 பேர் சிறையில் உள்ள நிலையில் நாகேஸ்வரி உடலை விளாப்பட்டியில் அவரது கணவர் வீட்டு வாயிலில் உறவினர்கள் புதைத்துள்ளனர்.
இதையடுத்து அத்துமீறி உடலை புதைத்ததாகவும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக விஜயா சகோதரர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து வீட்டு வாயிலில் உடலை புதைத்தது தொடர்பாக 50 பேர் மீது அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.