புதிதாக 1,320 டாக்டர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன் அவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்ததுள்ளது. இவ்வாறு புதிய நியமனம் பெறும் டாக்டர்கள், அன்றைய தினமே, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர்.
குறிப்பாக அவர்களில் பெருமளவிலானோர் கஷ்டப்பிரதேச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர். இது குறித்து சுகாதார அமைச்சு தெரிவித்ததுள்ளது.நாட்டில் தற்போது 19,000 டாக்டர்கள் சேவையிலுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 20,000 மாக அதிகரிக்கும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்தளவு அதிகளவிலான டாக்டர்கள் ஒரே தடவையில் நியமிக்கப்படுகின்றனர்.
இது,சுகாதாரத் துறையில் ஈட்டிக்கொள்ள முடிந்துள்ள பாரிய வெற்றியாகுமென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வருடாந்தம் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1500 இதிலிருந்து 1800 ஆக காணப்படுகிறது. இதனை 5,000 மாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனை இலக்காகக் கொண்டு சுகாதாரத் துறையை மேலும் முன்னேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.