இலங்கையில் குழந்தைப் பிறப்பைப் பதிவு செய்யும் போது பெற்றோர்கள் திருமணமானவர்கள் என்ற தகவலை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
தாய் தனியாக வாழக்கூடிய தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அது சங்கடத்திற்குரிய விடயம் அல்ல எனவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.
குழந்தையை வளர்ப்பதில் சிரமமான சூழ்நிலை இருந்தால், அந்தக் குழந்தையைத் தத்தெடுக்கத் தயார் எனத் தெரிவித்த அமைச்சர், குழந்தைக்கு ஏதேனும் அனர்த்தம் ஏற்படப் போவதாகத் தெரிந்தால் அல்லது குழந்தையை பராமரிக்க முடியவில்லை என்றால் 1929 என்ற தொலைபேசி அழைப்பிற்கு அழைக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு பெண்ணும் இந்த தொலைபேசி எண்ணை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கருக்கலைப்பு ஒரு நல்ல விடயம் என்று தனிப்பட்ட முறையில் தான் நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தாய்மைக்கு பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக பிறந்த குழந்தையை கழிவறையில் விடுவது, குழந்தையை இறால் கூண்டில் தள்ளி கொல்ல முயற்சிப்பது, வெளிநாட்டில் உள்ள மனைவி பணம் அனுப்ப வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்காக குழந்தையை அடிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் 350க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான வீடுகளை வழங்கியுள்ளதாகவும் கூறிய கீதா குமாரசிங்க, ஒரு பெண் இரவில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் ரயிலுக்கு செல்லாமல் அந்த இடங்களுக்கு செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.