பிரேசிலை தாக்கிய அதிதீவிர புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
பிரேசிலில் கடந்த பிப்ரவரி மாதம் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 65 பேர் உயிரிழந்த நிலையில், ஜூன் மாதத்தில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் 20 பேரை பலிவாங்கி இருந்தது. இந்த நிலையில், சூறாவளி, மழை, வெள்ளத்தால் மற்றும் ஒரு பேரழிவை பிரேசில் சந்தித்துள்ளது. அந்நாட்டின் தெற்கு மாகாணங்களை தாக்கிய வெப்ப மண்டல சூறாவளி ஆயிரக்கணக்கானோரை வீடு இழக்க வைத்துள்ளது.
சூறாவளியை தொடர்ந்து பெய்த மிகப்பலத்த மழையால் முக்கிய நகரங்கள் வெள்ளகாடாக மாறின. சில மாகாணங்கள் பெரும் சேதங்களை சந்தித்து உள்ளது.கனமழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சுமார் 10 அடிக்கு வெள்ளம் புகுந்ததால் வீட்டின் கூரைகள் மற்றும் மாடிகளில் தஞ்சம் அடைந்த மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். புயல், மழை, வெள்ளத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி கரைக்கடந்துவிட்ட நிலையில், மீட்புப் மற்றும் நிவாரணப் நடவடிக்கைகளை பிரேசில் அரசு போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளது. மிக பலத்த புயல் காற்றால் சேதம் அடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.சூறாவளி, கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை 39 பேர் பலியாகி இருப்பதாக பிரேசில் பேரிடர் மேலாண்மை படையினர் தெரிவித்துள்ளனர்.15க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்று புகார்கள் வந்துள்ளதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.