நியூயார்க், அமெரிக்காவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் அமண்டா பைனஸ். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் தெருவில் சுற்றி திரிந்தபடி காணப்பட்டு உள்ளார். அவர் வழியில் சென்ற காரை நிறுத்தி அதன் ஓட்டுனரிடம் பேசியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவர் கார் ஓட்டுனரிடம், மனநல சிகிச்சை பெற்று வந்தேன் என கூறியுள்ளார். அதன்பின்னர், அவரே 911 என்ற எண்ணுக்கு தொலைபேசி வழியே அழைப்பு விடுத்து உள்ளார். இதன்பின் அவரை மீட்டு அருகே இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் உதவியுடன் மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என நிபுணர் ஒருவர் முடிவு செய்து உள்ளார். இதன்படி, அவர் பல நாட்கள் வரை மனநல சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக, இதுபோன்ற விசயங்களில் 3 நாட்களில் சிகிச்சை முடிந்து வெளியே வரும் சூழலில், நோயாளியின் தேவைக்கு ஏற்ப சிகிச்சை நீட்டிக்கப்படும். அமண்டாவுக்கு பைபோலார் டிஸ்சார்டர் என்ற மனநல பாதிப்பு உள்ளது என டி.எம்.இசட் என்ற அந்த பத்திரிகை தெரிவிக்கின்றது.
அவர், 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் திரையில் தோன்றி பிரபல நடிகையாக அறியப்பட்டவர். ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன் அண்டு வாட் எ கேர்ள் வான்ட்ஸ் போன்ற திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய பின் ரசிகர்கள் வட்டம் பெருகியது. இதுபற்றி பேஜ்சிக்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில், கடந்த காலத்தில் அமண்டா மனநல பாதிப்புடனும், போதை பொருள் பாதிப்புகளாலும் போராடி வந்து உள்ளார் என தெரிவிக்கின்றது. அவரது முன்னாள் காதலர் கூறும்போது, அமண்டா மருத்துவ சிகிச்சைகளை எடுக்காமல் விட்டு விட்டார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட அவர் மனநல சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். 2013-ம் ஆண்டு மனநலம் பாதிப்புக்காக அவர் பராமரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர், அவருக்கு சட்ட உதவி தேவைப்படாது என நீதிபதி ஒருவர் விசாரணையின்போது கூறினார். அப்போது, ரசிகர்களை நோக்கி இன்ஸ்டாகிராமில், வீடியோ வழியே உங்களது அன்புக்காக நன்றி என அமண்டா தெரிவித்து கொண்டார். இந்நிலையில், தெருவில் அலங்கோலமுடன் சுற்றி திரிந்த அவரை மீட்டு, மீண்டும் மனநல சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று உள்ளனர்.