தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. 1984- ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆன மயில்சாமி . சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2000-ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. பிரபல தனியார் டிவியில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை மயில்சாமி தொகுத்து வழங்கினார். அப்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் முன்பே அவரின் உயிரின் பிரிந்துவிட்டது. அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர். மயில்சாமியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் மயில் சாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு அவருடனான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.