பிரதமர் மகிந்த ராஜபக்ச தானாக பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கொண்டு வந்து அவரையும் அரசையும் வெளியேற்றுவோம். மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து அகற்றப்படுவார் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் பிரதமர் தீர்மானமிக்க அரசியல் முடிவொன்றை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலில் நிலையானது எதுவுமில்லை. ஒருவரிடமுள்ள அதிகாரங்களை காலத்துக்கு காலம் மாற்றும் பலம் மக்களிடமுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் தற்போதைய நிலைமையில் மக்களின் கோரிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஒருவேளை, பிரதமர் தானாக பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கொண்டு வந்து அவரையும் அரசையும் வெளியேற்றுவோம். அந்த நிலைமைக்கு தள்ளாது, உரிய அரசியல் முடிவை பிரதமர் எடுப்பார். அதுவும் அடுத்த வாரத்திற்குள் இடம்பெறும் என்றே எதிர்ப்பார்க்கின்றோம்.
அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எவ்வேளையிலும், அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.