வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்ததுடன் 6 மாணவர்கள் காமடைந்துள்ளனர்.
மதிய உணவுவேளையின் போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் 6 மாணவர்கள் குறித்த நீர்குழாய்க்கு அருகில் கைகழுவுவதற்காக சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குறித்த நீர்குழாய் சுவர் நீண்ட காலமாக கவனிப்பாரற்று இருந்ததாகவும், உடைந்து விழும் அபாயத்தில் இருந்ததாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் சம்பவமறிந்து, பாடசாலைக்கு விரைந்த மாணவர்களின் பெற்றோர் சம்பவம் தொடர்பிலான தகவல்களை பெற முயற்சித்தபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரலவழைக்கப்பட்டுள்ளனர்.மேலும் உயிரிழந்த சிறுமிக்கு இன்று பிறந்த தினம் எனவும், அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தபோது, அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிவதாகவும் உறவினர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதேவேளை காயமடைந்தவர்களில் இரண்டு மாணவிகளும் அடங்குகின்றனர்.இவர்கள் முதலாம் தரத்தில் கல்விப்பயிலும் 6 வயதானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஐந்து மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு பலத்த காயங்கள் ஏற்படவில்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.