பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) பல அரச நிறுவனங்களை அழைக்க தீர்மானித்துள்ளது.09 ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட கோப் குழுவின் அங்குரார்ப்பண கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்றதுடன் அதன் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டார்.
இந்தக் குழு நாளை (மார்ச் 07) பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடவுள்ளதுடன், மத்திய கலாசார நிதியத்தின் அதிகாரிகள் நாளை குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் நாளைய தினம் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மறுநாள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட நிலையில், மார்ச் 09 ஆம் திகதி காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள பல வர்த்தமானிகளில் அடங்கியுள்ள உத்தரவுகள் நாளைய நாடாளுமன்ற அமர்வின் போது எடுத்துக் கொள்ளப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் விவாதம் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.