பஞ்சாபில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் 3 நாட்களாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹரியானாவிலும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
பயிர் கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் 3 நாள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமிர்தசரஸ், டேவிதாஸ்புரா, ஜலந்தர், மோஹா, குர்தாஸ்பூர் உள்ளிட்ட இடங்களில் தண்டவாளங்களில் கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் மறியல் செய்து வருகின்றனர். ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரித்தனர். ரயில் மறியல் போராட்டம் 3-வது நாளாக இன்றும் தொடர்வதால் 90 மெயில் விரைவு ரயில்கள், 150 பயணிகள் ரயில்கள் உட்பட 240 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் டிராக்டர்களுடன் நெடுஞ்சாலையில் மறியல் செய்த விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தேசிய நெடுஞ்சாலையை முடக்கிய விவசாயிகள் வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மறியல் செய்த விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.