நோர்டன் பிரிட்ஜ் – தியகல வீதியில் நேற்று (பிப்ரவரி 19) இரவு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். .உயிரிழந்தவர் 33 வயதுடைய திலான் கௌசல்யா எனவும், ஹிக்கடுவை கலுபே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, நுவரெலியா மாவட்டத்தின் நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 26 மற்றும் 30 வயதுடைய இரு பெண்களும் பண்டாரவளை மற்றும் தெலிஜ்ஜவில பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ பாத யாத்திரைக்கு சென்று திரும்பிய பேருந்தில் 28 பயணிகள் பயணித்ததாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், விபத்தில் காயமடைந்த 27 யாத்ரீகர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இருப்பினும் இரண்டு பெண்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
28 பயணிகளில் 27 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையை பொலிஸார் மற்றும் லக்சபான இராணுவ முகாமின் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.இதனையடுத்து 33 வயதுடைய ஆணின் சடலம் பேருந்தின் அடியில் கண்டெடுக்கப்பட்டதாக எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா குறிப்பிட்டார்.
தகவல்களின்படி, பேருந்து சாலையை விட்டு விலகிய பின்னர் கிட்டத்தட்ட 225 அடி பள்ளத்தில் விழுந்தது.உயிரிழந்த மூவரின் சடலங்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று (பிப்ரவரி 20) இடம்பெறவுள்ளன.
காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 14 பெண்களும் 11 ஆண்களும் அடங்குவதாகவும், அவர்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த 25 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி மற்றும் கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் இரத்மலானையில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் அடங்குவதாகவும், அவர்கள் சனிக்கிழமை (பிப்ரவரி 18) ஸ்ரீ பாத யாத்திரைக்காகப் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.