நேபாளத்தில் நேற்றிரவு 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கங்களின் போது உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. Bajura மாவட்டத்தில் உள்ள Dahakot பகுதியை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் இரவு 11:58 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 4.9 ரிக்டர் அளவிலும், 1:30 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலும் பதிவானதாக நேபாளத்தின் சுர்கெட் மாவட்டத்தில் உள்ள நில அதிர்வு மையத்தின் அதிகாரி ராஜேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்த 2 நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்து, வீடுகளை விட்டுவெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
நேபாளத்தில் கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்த நாட்டில் 8,694 பேர் பலியாகினர். சுமார் 21 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு சுவடுகள் மறைவதற்குள் மீண்டும் அதே ஏப்ரல் மாதம் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.