தொண்டி அருகே பல நூறு ஆண்டுகள் முந்திய ராமர் பாத கோயில் முற்றிலும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இக்கோயிலை புதுப்பித்து கட்ட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமாயண காலத்தில் ராமர் சீதா பிராட்டியை தேடி இலங்கை நோக்கி செல்லும் போது, எண்ணிய காரியம் வெற்றி பெற வேண்டி முன்னோர்களை வேண்டி தீர்த்தாண்டதானம் கடலில் நீராடி தர்ப்பணம் செய்து இங்குள்ள சர்வதீர்த்தங்கள் வரை வணங்கியதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தீர்த்தாண்ட தானம் அருகே உள்ள இடையன்வயல் கிராமத்தில் ராமர் பாதம் மட்டும் உள்ள கோயில் கட்டப்பட்டுள்ளது.
கோயிலின் முகம் ஒருவர் மட்டுமே குனிந்து செல்லும் வகையில் நுழைவு வாயில் உள்ளது. உள்ளே இரண்டு தூணின் அடிப்பகுதியில் இரு சிற்பம் உள்ளது. மேல் பகுதியில் ராமர் பாதம் மட்டும் உள்ளது. மூன்று மாடங்களிலும் விளக்கு ஏற்ற இடம் உள்ளது. வெளியே வலப்புறத்தில் அம்மன் சிலையும் இடப்புறத்தில் மாடமும் உள்ளது. கோயிலின் பின்புறம் ஓட்டு கட்டிடத்தில் சமண பள்ளி உள்ளது. கோயிலை ஒட்டி குளம் ஒன்று உள்ளது அதுவும் புல் வளர்ந்து உள்ளது. ஒரு காலத்தில் மிகவும் சிறப்புடன் இருந்த கோயில் தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலை புனரமைப்பு செய்து சுற்றுலா தலமாக மாற்ற சுற்றுலா துறை சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கோயிலை சுற்றிலும் இருந்த காட்டு கருவேல மரங்கள் ஊராட்சி சார்பில் அகற்றப்பட்ட தோடு சரி இது நாள் வரை அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உடனடியாக கோவிலை புனரமைப்பு செய்து குளத்தை தூர்வாரி பணிகள் துவங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதி மக்கள் கூறியது, ராமர் பாதம் இந்த பகுதியில் தனுஷ்கோடியை அடுத்து இங்கு தான் உள்ளது. தமிழகத்தில் ராமருக்கு கோயில் அதிகம் இல்லை. இங்கு பாதம் இருப்பது கூடுதல் சிறப்பு. சுற்றுலா துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த இடம் சுற்றுலா தலமாக மாறினால் சுற்று வட்டார மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றனர்.