இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் பிரதானிகளுள் ஒருவரான சரோஜ் குமார் ஜா தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை நேற்று (11) சந்தித்து பேச்சு நடத்தினர்.
கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கையில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தடையின்றி நீரை விநியோகிப்பதற்கும் ஒரு இளம் அமைச்சராக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் பற்றி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், நீர்வழங்கல் தொடர்பான அனைத்து அரச திணைக்களங்கள், அரச நிர்வாக பொறிமுறை மற்றும் தனியார் துறையை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தனி அலகொன்றை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அதன் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் சம்பந்தமாகவும் எடுத்துரைத்தார்.
அதேபோல எதிர்கால திட்டங்கள் பற்றியும், அதற்கு உலக வங்கியின் பங்களிப்பு, ஒத்துழைப்பு, ஆலோசனை அவசியம் எனவும் உலக வங்கி தூதுக்குழுவினரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகளை வரவேற்ற உலக வங்கி குழுவினர், அமைச்சருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
உலக வங்கியின் உதவியுடன் நீர்வழங்கல் துறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றது.