நீர்கொழும்பு, மங்குளிய களப்பு பகுதியில் இருந்து 13 கோடி ரூபா பெறுமதியான 400 கிலோ 810 கிராம் கேரளக் கஞ்சா நேற்று (21) மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கேரளக் கஞ்சாப் பொதிகளை கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் டிங்கி இயந்திரப் படகு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்படுள்ளது.
நீர்கொழும்பு, மங்குளிய களப்பு பகுதியில் இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளைக்கு சொந்தமான களனி கடற்படையினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றை அவதானித்து அதனை பரிசோதித்த கடற்படையினர், குறித்த டிங்கி இயந்திர படகில் மிகவும் சூட்சகமான முறையில் 10 பார்சல்களில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ 810 கிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த கேரளக் கஞ்சா கொண்டு வரப்பட்ட டிங்கி இயந்திர படகினையும் கைப்பற்றியுள்ளனர்.எனினும், இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா மற்றும் டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுவரித் திணைக்களத்தின் நீர்கொழும்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.