இணையம் மூலம் உலகெங்கிலும் உள்ள பலரது வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடியதாகக் கூறப்படும் சீனப் பிரஜைகள் குழுவொன்றை இலங்கை பொலிஸார் சனிக்கிழமை அளுத்கமவில் கைது செய்துள்ளனர்.
அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்து இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த 39 சீன பிரஜைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று (1) பல பொலிஸ் குழுக்கள் சீனர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சுற்றிவளைப்பின் பின்னர் அவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பெண்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட 39 சீன பிரஜைகளும் அளுத்கம பொலிஸாருக்கு தனியார் பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதுடன், பொலிசார் கணினிகள் மற்றும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஏராளமான பணத்தை ஆதாரமாக கைப்பற்றினர்.
அவர்கள் சீனாவில் இருந்த போது இந்த மோசடியை மேற்கொண்டு இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.