யாழ்ப்பாணம், நாவற்குழியில் கணவனால் அடித்துக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற்றது.நாவற்குழி, ஐயனார் கோயிலடியில் இந்த கொலைச்சம்பவம் நடந்தது.கடந்த 15ஆம் திகதி இரவு நீண்டநேரம் கணவனால் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்ட மனைவி, நேற்று (16) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.உயிரிழந்த அஜந்தன் யமுனா (23) என்ற பெண்ணின் சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, அவரது உடலின் பெரும்பாலான பகுதிகளில் கண்டல் காயங்கள் ஏற்பட்டதால், இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.இரவு 2 மணித்தியாலங்கள் மனைவியை, கணவன் தாக்கியுள்ளார். 3 பச்சைமட்டைகள் அங்க தும்புதும்பாக காணப்பட்டுள்ளன.அத்துடன், மனைவியின் முகம், தலையில் கை முட்டியினால் கொடூரமாக குத்தியுள்ளார். தலை முழுவதும் கண்டல் காயங்கள் ஏற்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.தாக்குதலை தடுக்க வந்த தாயாரையும், அருகிலுள்ள அறைக்குள் வைத்து பூட்டி விட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.
மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டதும், வாடகை முச்சக்கர வண்டியில் நவற்குழியிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். இதன்போது, முச்சக்கர வண்டி சக்கரம் காற்று போயுள்ளது. சாரதி, முச்சக்கர வண்டிக்கு பின்னால் சென்று, சக்கரத்தை மாற்றி விட்டு, முன்பக்கம் வந்தபோது, அஜந்தனும், மனைவியும் காணாமல் போயிருந்தனர்.காயமடைந்த மனைவியை அவர் எப்படி அங்கிருந்து கொண்டு சென்றார் என்பது அந்த சாரதிக்கு தெரியவில்லை.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மனைவியை அனுமதித்து விட்டு, அஜந்தன் தலைமறைவாகி விட்டார்.
மறுநாள் காலை 6.30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு சென்ற போது, மனைவி உயிரிழந்த தகவலை அறிந்துள்ளார். மீண்டும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று, பஸ்தியான் சந்திக்கு அண்மையாக மற்றொரு முச்சக்கர வண்டிக்குள் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட அஜந்தன் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.