ஊழியர்கள் பற்றாக்குறையால் நாளை (2) 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படலாம் என நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் திரு.சுமேத சோமரத்ன இன்று (1) தெரிவித்தார்.
டிசெம்பர் 31ஆம் திகதி ஏறக்குறைய 500 புகையிரத ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அதிகாரிகள் விரைவில் தீர்க்க வேண்டும் எனவும் சோமரத்ன தெரிவித்தார்.
ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவித்த திரு.சோமரத்ன, ஒப்புதலின்றி ஒன்றரை வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த நான்கு ஊழியர்கள் சம்பளமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போதிலும் 2013 ஆம் ஆண்டு முதல் பதவிகளுக்கான அங்கீகாரம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இந்த பதவிப் பிரச்சினை காரணமாக மாத்தறை முதல் பெலியத்த வரையிலான நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சோமரத்ன தெரிவித்தார்.
இப்பிரச்சினைகள் தொடர்பில் ரயில்வே அதிகாரிகள் விளக்கமளிக்காவிட்டால் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சோமரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.