தற்போது சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலை கருத்தில் கொண்டு, நுகர்வோர் அதிகார சபை சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, கீரி சம்பா ஒரு கிலோகிராம் 260 ரூபாவுக்கும், சம்பா ஒரு கிலோகிராம் 230 ரூபாவுக்கும், நாடு அரிசி ஒரு கிலோகிராம் 220 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும். அத்துடன், ஒரு கிலோ சிவப்பு அரிசியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டால், தனிநபரால் நடத்திச் செல்லப்படும் வர்த்தக நிலையத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு 5 முதல் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.