நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 10ம்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட ‘செரியபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 7ம்தேதி வந்தது. இதன்பின்னர் 8ம்தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததால், மறுநாள் 9ம்தேதி நடக்கவிருந்த சோதனை ஓட்டம் ரத்து செய்யப்பட்டது. 10ம்தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், திடீரென நிர்வாக காரணங்களால் பயணிகள் கப்பல் போக்குவரத்து 12ம்தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவங்கப்படவில்லை. 14ம்தேதி (இன்று) போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று(14ம்தேதி) காலை 8.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் ஒன்றிய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டனர்.