முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்து இங்கிலாந்தை வீழ்த்த காரணமாக இருந்தார்
வெற்றிக்கு பின் தன் சதம் குறித்து ஷாய் ஹோப் பேசுகையில் தோனி சொன்ன வார்த்தைகள் தன் மனதை மாற்றியதாகவும், அவர் சொன்ன அறிவுரையை செயல்படுத்தி சதம் அடித்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து அணி 2023 உலகக்கோப்பையில் ஏற்பட்ட படுதோல்விக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 325 ரன்கள் குவித்தது. ஹாரி பரூக் 71 ரன்கள் எடுத்து இருந்தார். கேப்டன் ஜோஸ் பட்லரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 326 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்தது.
துவக்க வீரர்கள் அலிக் அத்தானாஸ் 66, பிராண்டன் கிங் 35 ரன்கள் சேர்த்தனர். அடுத்து கீசி கார்டி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்து 109 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஏழாம் வரிசை பேட்ஸ்மேன் ரொமாரியோ ஷெப்பர்ட் 49 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். 48.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்தது குறித்து பேசும் போது தோனி சொன்ன அந்த அறிவுரையை குறிப்பிட்டார். பேட்டிங் செய்யும் போது ஒரு வீரர் ஓவர்கள் குறைவாக இருக்கிறது என நினைத்து பதற்றம் அடைந்து வேகமாக ரன் குவிக்க முயற்சி செய்வார்கள். ஆனால், உண்மையில் மனதில் நாம் நினைப்பதை விட கூடுதல் நேரம் நமக்கு உள்ளது என தோனி அவரிடம் கூறியதாக தெரிவித்தார். இது பற்றி ஷாய் ஹோப் கூறியது – “இந்த சதம் வெற்றி பெறும் போது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வெற்றிக்காகத் தான் நான் ஆடுகிறேன். சில காலத்துக்கு முன் நான் தோனியுடன் பேசினேன். அப்போது அவர் பேட்டிங் செய்யும் போது நீங்கள் மனதில் நினைப்பதை விட அதிக நேரம் உங்களுக்கு இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் என் மனதை தாக்கியது.” என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சதம் அடித்தது குறித்து இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் தோனி தனக்கு சொன்ன அறிவுரை என ஷாய் ஹோப் தற்போது கூறி இருக்கும் இதே விஷயத்தை தான் கூறினார். இரண்டு வீரர்கள் சதம் அடித்த பின் தோனி கூறிய அறிவுரையால் சதம் அடித்து இருக்கிறோம் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.