தெற்கில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிக்கு இடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து தற்போது வீதியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று (11) பிற்பகல் பெய்த மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ இடையிலான 102 கிலோ மீற்றர் பகுதி வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
எவ்வாறாயினும், நான்கு பாதைகளில் இரண்டு பாதைகள் புனரமைக்கப்பட்டு இன்று (12) பிற்பகல் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.
இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்து தேவையான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்தன தெரிவித்தார்.
இதேவேளை மண்சரிவு ஏற்பட்ட போது குறித்த இடத்தை பார்வையிடச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, ஓபநாயக்க மாதொல பகுதியில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.