துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதிக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.துருக்கி, சிரியா எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் பல ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் இடிந்து மண்ணில் புதைந்தன. இதனால் மக்கள் கொத்து கொத்தாக இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை 3,500 ஆக இருந்தால், இதை விட மொத்த பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகமாக, அதாவது 30 ஆயிரமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்தது.
ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்டு கடந்த 6 நாட்களாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. இரவு பகலாக மீட்புப்பணிகள் நடந்து வரும் போதிலும், இரு நாடுகளிலும் இன்னும் பல இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படவில்லை. இதனால், பலர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், 6 நாட்களைத் தாண்டுவதால் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு சிலர் மட்டுமே 150 மணி நேரத்தையும் தாண்டி அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துருக்கியின் கிராமன்மராஸ் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.