தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் வசதியாக சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
வரும் நவம்பர் 12ம் தேதி ஞாயிறு அன்று தீபாவளி பண்டிகை வருகிறது. இதையொட்டி வெளியூர் பயணங்களுக்கு பலரும் திட்டமிட்டுள்ளனர். வழக்கத்தை விட கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் பேருந்து, ரயில் வசதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியுள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு வழக்கமாக இயக்கப்படக்கூடிய ரயில்களில் முன்பதிவு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
இதனால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தாம்பரம்- நாகர்கோயில், மங்களூரு- தாம்பரம், நாகர்கோயில் – மங்களூரு – ஆகிய மூன்று வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதேபோல், நாகர்கோயில் – மங்களூரு இடையே வரும் 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயிலானது கோழிக்கோடு, பாலக்காடு, சேலம், அரக்கோணம் வழியாக சென்னை தாம்பரம் வந்தடையும் வகையில் வரும் 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கேற்ப பயணிகள் தயாராகி கொண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம்.