கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், தனது ரசிகர்களுக்காகவும், மற்ற வீரர்களுக்காகவும் புதிய ட்விட்டர் பதவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் ரிஷப் பண்ட், கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று கார் விபத்தில் சிக்கினார். உத்தர்காண்ட்-ல் உள்ள ரூர்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்களால் மீட்கப்பட்ட பண்ட் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மும்பையில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரின் கால்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறப்பட்டு வந்தது. 2 வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் உள்ள ரிஷப் பண்ட்-ஐ கிரிக்கெட் வீரர்களும், உறவினர்களும் பெரியளவில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவரின் நிலைமை தெரியாமல் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் விபத்திற்கு பிறகு முதல் முறையாக ரிஷப் பண்ட் ட்விட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் பணிவான நன்றியை கூறிக்கொள்கிறேன். எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். குணமடைந்து வெற்றி பாதையில் வருவதற்கான பயணம் தொடங்கிவிட்டது. அந்த பயணத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு நான் தயாராக இருக்கிறேன். எனக்கு முழு உதவுகளையும் செய்துக்கொடுத்த பிசிசிஐ மற்றும் ஜெய் ஷா ஆகியோருக்கு நன்றி.
எனக்கு புத்துணர்ச்சியையும், நம்பிக்கை வார்த்தகளையும் கொடுத்த ரசிகர்கள், அணி வீரர்கள், மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் இதையத்தில் இருந்து நன்றி கூறிக்கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் களத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என ரிஷப் பண்ட் குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ள ரிஷப் பண்ட் குணமடைந்து மீண்டும் பழைய உடற்தகுதியை பெறுவதற்கு இன்னும் 10 மாதங்கள் வரை ஆகலாம் எனக்கூறப்படுகிறது. இதனால் 2023ம் ஆண்டு ஐபிஎல், ஆசிய கோப்பை தொடர், 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என முக்கிய தொடர்களில் அவரை காண முடியாது எனத்தெரிகிறது.