அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையத்தில் செயல்படும் ஒரு பள்ளியில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ராஹித் (வயது 25) என்பவர் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய உறவினர் கூடலூரை சேர்ந்த ஜீவா (30). இந்தநிலையில் நேற்று ஜீவாவும், ராஹித்தும் ஆட்டோவில் சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது ஜீவா ராஹித்திடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஹித் என்னுடைய வீட்டில் இதை விரும்ப மாட்டார்கள். என்று கூறி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜீவா தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ராஹித்தின் கழுத்தை அறுத்தார். இதனால் ரத்தம் வழிய ராஹித் அலறி துடித்தார். உடனே ஜீவா அங்கிருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார். இதைப்பார்த்த பொதுமக்கள் ஜீவாவை சுற்றி வளைத்து பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார்கள். போலீசார் அவரை கைது செய்தார்கள். இதற்கிடையே சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட ராஹித் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.