இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
டெல்லியிலுள்ள கமலா நேரு கல்லூரி மாணவி நர்கீஸ், 26 வயதான இர்பான் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது.இவர்களது திருமணத்திற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நர்கீஸ் இர்பானுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். பின்னர், நர்கீஸ் தன்னுடன் பேசுவதை நிறுத்திய பிறகு இர்பான் வருத்தமடைந்துள்ளார்.இந்த ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த நர்கீஸ் மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவ தினமான (28) தெற்கு டெல்லி மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே உள்ள பூங்காவிற்கு நர்கீஸ் தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார்.அப்போது அவர், திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் இரும்புக் கம்பியால் தாக்கி கொல்லப்பட்டார்.
பின்னர், தகவலறிந்தது தெற்கு பொலிஸ் துணை கமிஷனர் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உயிரிழந்த பெண்ணின் உடல் அருகே ஒரு கம்பி மற்றும் அவரது தலையில் காயங்கள் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.மேலும், இந்த கொலை தொடர்பாக அவரது 28 வயது நண்பரான இர்பானை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில், முதற்கட்ட விசாரணையில் “சிறுமியை தடியால் தாக்கியதில் அவரது தலையில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.மேலும், பாதிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால், அவரை கொலை செய்ய தூண்டியதாக இர்பான் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால்,”மாளவியா நகர் போன்ற ஆடம்பரமான பகுதியில், ஒரு பெண் கம்பியால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.டெல்லி மிகவும் பாதுகாப்பற்றது. குற்றங்கள் நிற்கவில்லை” என ட்வீட் செய்துள்ளார்.