திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் 2 யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து 3 கும்கி யானைகள் இன்று வந்துள்ளன.
கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 ஆண் யானைகள் கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர்குப்பம், தண்ணீர்பந்தல் பகுதி வழியாக அங்குள்ள சரஸ்வதி ஆறு, ஜோலார்பேட்டை அருகே உள்ள திரியாலம் ஏரி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தன. இவற்றை வனத்துறையினர் 5 குழுக்களாக ஆங்காங்கே கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கருப்பனூர், அண்ணான்டப்பட்டி வழியாக பாச்சல் ஊராட்சி லட்சுமி நகரில் உள்ள ஏரியில் 2 யானைகளும் பல மணிநேரம் ஆனந்த குளியல்போட்டன. பின்னர் அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளான லட்சுமிநகர், அன்னை நகர், ஆசிரியர் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதி வழியாக திருப்பத்தூர் நகர எல்லைக்கு நேற்றிரவு சென்றன.
நள்ளிரவு கருப்பனூர் வழியாக திருப்பத்தூர் பெரிய ஏரிப்பகுதி வழியாக வெங்களாபுரம், முத்தம்பட்டி பகுதிகளை கடந்து சவுடேகுப்பம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் முகாமிட்டது. யானைகளை விரட்ட திருப்பத்தூர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் நேற்றிரவு மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இன்று அதிகாலை முதல் திப்பசமுத்திரம் பகுதியில் யானைகள் அங்குள்ள விவசாய நிலத்தில் புகுந்தன.