தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஒடிசாவிற்கு பயணம் மேற்கொண்டு இருப்பது கவனம் பெற்றுள்ளது. அவரின் இந்த பயணத்திற்கு பின் பல்வேறு திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்று ஒடிசா. ஒடிசா அரசுதான் இந்திய ஹாக்கி அணிக்கு அதிகாரபூர்வமா ஸ்பான்சராக இருக்கிறது,
அதலபாதாளத்தில் இருந்த ஹாக்கி அணியை திடீரென மேலே கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தது அம்மாநிலத்தின் நவீன் பட்நாயக் அரசுதான்.
தற்போது கூட ஒடிசாவில் 2023 Men’s FIH Odisha Hockey World Cup எனப்படும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஒடிசாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன்பின் சென்னையில் விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் முடிவில் நேற்று உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளார். ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அங்கிருந்து இவர்கள் இருவரும் World Skill Centre பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
நவீன் பட்நாயக்கின் அழைப்பின் பெயரில் உதயநிதி அங்கே சென்றதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உதயநிதியுடன் சில சீனியர் அதிகாரிகளும் இதில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். World Skill Centre பகுதியில் இருக்கும் பயிற்சி மையங்கள், சோதனை கூடங்கள், ரோபோடிக்ஸ் அமைப்புகள் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். விளையாட்டுத்துறை மட்டுமின்றி இளைஞர் நலன் துறைக்கும் உதயநிதிதான் அமைச்சர் என்பதால், அவர் அங்கு இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். இதே போன்ற ஸ்கில் செண்டர் எனப்படும் ஆய்வகங்களை உள்ளடக்கிய திறன் மேம்பாட்டு கூடம் ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அங்கே உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் விரைவில் இதற்கான அறிவிப்பு அரசு தரப்பிடம் இருந்து வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
ஒடிசாவில் இருக்கும் World Skill Centre என்பது உலகத்தரத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். சிங்கப்பூரை சேர்ந்த ITEES அமைப்புடன் சேர்ந்து இந்த கூடத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பல்வேறு ஆய்வு கூடங்கள், படிப்பகங்கள், ஆலோசனை மையங்கள் இணைய திறன் மேம்பாட்டு கூடம் ஆகும். இதே போன்ற கூடத்தை தமிழ்நாட்டில் உருவாக்கவே உதயநிதி ஸ்டாலின் இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளார். அதேபோல் அங்கே நடக்க உள்ள ஹாக்கி உலகக் கோப்பை தொடரையும் பார்க்க உள்ளார்.
ஏற்கனவே தலைநகர் சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியை’ அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது. இன்னொரு பக்கம் இதற்காக தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் இன்னொரு விளையாட்டு நகரத்தை அமைக்கவும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் நடக்க உள்ளது. சென்னை அருகே இடம் கிடைக்காத நிலையில் திருச்சி அருகே இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச போட்டிகளை நடத்தும் விதமாகவும், சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது.
மாதிரி படம் சர்வதேச நாடுகளில் இருப்பது போன்ற பிரம்மாண்ட விளையாட்டு அரங்கத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது மிகப்பெரிய முகப்பு அரங்கு இதில் அமைக்கப்பட்டு உள்ளது. நான்கு கால்பந்து அரங்குகளும் இதில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் 4 டென்னிஸ் கோர்ட்கள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன. உள் விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அதற்காக தனியாக மிகப்பெரிய அரங்கு இங்கே உருவாக்கப்பட்டு உள்ளது. தடகள போட்டிகளுக்கான அரங்கு தனியாக இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. தற்போது ஒடிசாவில் விளையாட்டு மைதானங்களை பார்வையிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், அதேபோன்ற கட்டமைப்பை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.