தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தீயணைப்பு வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தாம்பரம் தீயணைப்பு நிலையம் 1975ம் ஆண்டு துவங்கப்பட்டு தாம்பரம், சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 184 தீ விபத்துகளை மேற்கொண்டு மனித உயிர்களையும், உடைமைகளையும் திறம்பட காத்து, 655 உயிர் மீட்பு அழைப்புகளை மேற்கொண்டு, 20 மனித உயிர்களை காப்பாற்றியதுடன், 467 விலங்குகளையும் காப்பாற்றி சிறப்புடன் செயல்பட்டுள்ளது.
தாம்பரம் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. எனவே, ஏற்கனவே தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் உள்ள 3 தீயணைப்பு வாகனங்கள் பெரும் விபத்துக்கள் ஏற்படும்போது, பணியில் ஈடுபடுத்த போதுமானதாக இல்லை என்பதால், கூடுதல் வாகனம் வேண்டும் என தீயணைப்பு துறை அதிகாரிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று தாம்பரம் தீயணைப்பு நிலையம் மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு நிலையமாக மாற்றப்பட்டு, நிலையத்திற்கு புதிய தீயணைப்பு வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.