“பீஸ்ட்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “தோழா” உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான “பூவே உனக்காக”, “காதலுக்கு மரியாதை” போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் ஹைதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தில் நடிகர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை ஜெயசுதா ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் ஷாம், யோகி பாபு, நடிகை சங்கீதா மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் யோகி பாபு விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.