தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது. கடந்த சில நாட்களாகவே தருமபுரி மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஒற்றையானை கடந்த ஒரு வாரமாக பாப்பார்பட்டி பகுதிகளில் சுற்றிதிரிந்து வந்தது. இதனை வனத்துறையினர் விரட்டி வந்த நிலையில் நேற்று பாப்பார்பட்டியில் இருந்து தருமபுரி வழியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த ஒற்றை யானை வெளியேறியது.
இன்று காலை மொரப்பூர் அடுத்த கம்பைநல்லூர் பகுதியில் யானை முகாமிட்டிருந்தது. மொரப்பூர் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கெலவள்ளி அருகே ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும்போது தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் சுமார் 25 வயது மதிக்கதக்க ஆண் யானை உயிரிழந்தது.
கடந்த 20 நாட்கள் முன்பு ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் மின்வேலியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் இறந்த நிலையில் மேலும் ஒரு யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.