சாலையோரம் காரை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்த தம்பதியை மிரட்டி பணம் கேட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். காஞ்சீபுரம், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு பின்னர் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய தம்பதி, காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி அருகே சாலையோரம் காரை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர், காரின் முன்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மிரட்டல் விடுக்கும் வகையில் விசாரணை நடத்தினார். அப்போது அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீஸ் உயரதிகாரி இதனை பார்த்து விசாரணை நடத்தியவரிடம் யாரென கேட்டபோது. காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் என தெரிவித்தார். கைது இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரி, காரில் இருந்தவர்கள் மற்றும் விசாரணை செய்தவர் என இரு தரப்பினரையும், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், தம்பதியிடம் விசாரணை நடத்தியவர் வேலூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 39) என்பதும், அவர் ஆவடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிவதும் தெரியவந்தது. பணம் கேட்டு காரில் வந்தவர்களை மிரட்டியதாக போலீஸ்காரர் பிரபாகரனை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.