தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விண்ணப்பித்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 175 மாணவர்களுக்கு பல சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு 3 கட்டங்களாக நடைபெறும். முதல் சுற்று பொது கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடத்தப்படுகிறது. 1,78,959 மாணவ, மாணவிகளுக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் 430 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தரவரிசையில் 22 ஆயிரத்து 761 இடம் வரையுள்ள மாணவர்கள் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். முதல் சுற்றில் மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் ஜூலை 30 மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரிகள் மற்றும் விருப்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். வரும் 31ம் தேதி காலை 10 மணிக்குள் மாணவர்களின் விருப்ப தேர்வு அடிப்படையில் அவர்களுக்கான தற்காலிக இடம் ஒதுக்கப்படும் என பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.