தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில், டெங்கு தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 252 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 593 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் சிகிச்சைக்கான மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சலை கட்டுப்படுத்த 24 குழுக்கள் அமைக்கப்பட்டு தினமும் 80 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 51 பேர் காய்ச்சல் காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் இதுவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 125 பேர் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்றுள்ளனர்.மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 17 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 20 வயது கல்லூரி மாணவர் உட்பட 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோருக்கென 50 படுக்கைகள், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு வருவோருக்கு 15 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.