தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கான அபராதம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான அலுவலகங்கள், கடைகளின் பெயர் பலகைகளை அரசாணைப்படி, தூய தமிழிலேயே வைக்க வேண்டுமென்ற அரசாணையை முறையாக அமல்படுத்த நடவடிக்கை வேண்டுமென தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளருக்கு ஏற்கனவே ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அரசு செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.50 அபராதமாக விதிக்கப்பட்டது. இந்தத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி அபராதம் வசூலிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் அமலுக்கு வரும். அரசாணையை பின்பற்றாதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான அரசாணையை பின்பற்றாமல் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, தொழிலாளர் நலத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர்.