திருச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் இருந்து தப்பி சென்னை வந்த 2 சிறுமிகளை போலீசார் மீட்டு, குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு 2 சிறுமிகள், துணி பைகளுடன் எங்கு செல்வது என தெரியாமல் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த பயணிகள், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு வந்து, சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.
அதில், திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இரட்டை சகோதரிகள் என்பதும், அங்குள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வருவதும் தெரியவந்தது.
பெற்றோரை இழந்த மாணவிகளை பெங்களுருவில்ல் வசித்து வரும் அவர்களது உறவினர் ஒருவர் படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி விடுதியில் இருந்து தப்பிய இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழிதெரியாமல் சுற்றியதாகவும் தெரிவித்தனர்.