கோப்பாய், சிலாபம், கட்டான மற்றும் கிரிந்திவெல பிரதேசங்களில் இடம்பெற்ற நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் அணிந்திருந்த சேலையின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் 56 வயதுடைய கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த உயிரிழந்தவரின் மகள் விபத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சிலாபம், தித்கட பிரதேசத்தில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் சிலாபம் கொக்கவில பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு – கிரிஉல்ல பிரதான வீதியில் கம்சபா சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் நடந்து சென்ற நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் சங்கமித்த கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
வீதியைக் கடக்கும்போது, பாதசாரி கடவையில் பெண் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் 67 வயதான கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.