டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் கம்பஹா மாவட்டத்திற்கு விசேட குழுவொன்றை (மே 08) அனுப்ப சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். .
மேலும், நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேல்மாகாணத்தில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி ஸ்ரீலங்கா எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக வலியுறுத்தினார்.
மேலும், மேல்மாகாண பாடசாலை வளாகத்தினுள் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு (மே 08) சுற்று நிருபம் வெளியிடவுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் லால் நோனிஸ் தெரிவித்தார்.
மேலும், டெங்கு அபாயத்தில் 15 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள டெங்கு நிலைமை தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால், நோய் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.