நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது. ஊழியர்கள் பஸ்சில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோது பஸ் டேங்க் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது. இதனைக்கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பங்க் ஊழியர்கள், அங்கிருந்த அவசர கால தீயணைப்பு கருவிகள் மூலம் பஸ்சில் பற்றிய தீயை ஓரளவு கட்டுப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து பஸ் டிரைவர், சாதுர்யமாக பஸ்சை அங்கிருந்து உடனடியாக இயக்கி எதிர்திசையில் சற்று தொலைவில் சென்று நிறுத்தினார். பின்னர் தொடர்ந்து பஸ்சில் பற்றிய தீயை அணைத்தனர்.
டீசல் நிரப்பிக் கொண்டிருந்த போது பஸ்சில் பற்றிய தீவிபத்தை தொடர்ந்து பஸ் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதால் பெட்ரோல் பங்க்கில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.