மூன்று மாத காலத்துக்குள், பஸ்கள் மற்றும் ரயில்களுக்கும் QR முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்துத் துறையை சிறந்த பயனுள்ளதாக முன்னேற்றுவதற்கும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கும் நோக்கிலும் மூன்று மாதங்களுக்குள் பயணிகள் பஸ் மற்றும் ரயில் பிரயாணச்சீட்டுக்களை விநியோகித்தல், ஆசனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் QR முறைமையின் கீழ் மேற்கொள்ளும் வகையில் முழுமையான டிஜிட்டல் மயப்படுத்தலுக்குட்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்படி டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச யோசனைகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் எந்த விதத்திலும் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நடைமுறை மேற்கொள்ளப்படாததன் காரணத்தினால் போக்குவரத்துத் துறையில் ஊழல் மோசடிகள் அதிகரித்து காணப்படுவதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று தற்போது நடைமுறையிலுள்ள முறைமையின் கீழ் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், அதனால் அதன் மூலம் பயனடையும் தரப்பினர் இந்த டிஜிட்டல் மயப்படுத்தும் முறைமையை சீர்குலைப்பதற்கு பல்வேறு மட்டங்களில் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடருமானால் ‘சிஸ்டம் சேஞ்ச்’ எந்த வகையிலும் இடம்பெறாதென்பதைக் கவனத்திற் கொண்டு தற்போதுள்ள நடைமுறையை பயனுள்ள விதத்தில் மாற்றம் செய்யும் நோக்கில் அதனை மூன்று மாதங்களுக்குள் டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக காலதாமதமின்றி உரிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், அதனூடாக 1,500 பஸ் வண்டிகளின் செயற்பாடுகளை ஒரே இடத்திலிருந்து அதன் மூலம் கண்காணிப்பு செய்யக்கூடியதாக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ் வண்டிகளினதும் செயற்பாடுகளை கொழும்பிலிருந்தே கண்காணிக்கும் வகையில் முறையான நடவடிக்கைகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.