சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் அதிக எண்ணிக்கையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையம் மொத்தம் 2,819 விமானங்களை கையாண்டுள்ளது. 2021-ம் ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது கடந்த ஆண்டு 38% அதிகமாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் 4,57,436 சர்வதேச பயணிகள் வந்து சென்றுள்ளனர். 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,46,436-ஆக மட்டுமே இருந்தது.
இதனால், விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் கூடுதல் எண்ணிக்கையில் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதோடு உலகின் பல்வேறு நகரங்களுக்கும் சேவை நீடித்து வருகிறது. இண்டிகோ நிறுவனம் சென்னையில் இருந்து பஹ்ரைனுக்கும், மஸ்கட்டுக்கும் விமானங்களை இயக்க உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு வரை பெங்களூருவை விட சென்னையில் கூடுதலாக சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது இந்த எண்ணிக்கை குறைந்ததால் சென்னை தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இச்சூழலில் சர்வதேச விமானங்களுக்கான ஒருங்கிணைந்த புதிய முனையம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று தெரிகிறது. புதிய சர்வதேச முனையம் திறக்கப்படும் பட்சத்தில் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.