சுற்றாடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
உலகளாவிய காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்நின்று செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், சுற்றாடலுக்காக இளம் சமூகத்தினரின் அர்பணிப்புக்களையும் பாராட்டினார்.
இளம் தலைவர்களைப் பாராட்டுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் (20) நடைபெற்ற நிகழ்விலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வானது பல்வேறு துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய இளம் தலைவர்கள் பாராட்டுவதற்காக லியோ கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவத் தலைவர்கள் மற்றும் உப மாணவத் தலைவர்கள், சர்வதேச லியோ கழகத்தின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் திறமைகளும் பாராட்டப்பட்டது.