சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுவாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிடும். அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் கார்களின் பயணிப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி விமான நிறுவனங்கள், டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளன.
இந்நிலையில், சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விமானத்தில் செல்ல அதிகளவு டிக்கெட்கள் புக்கிங் செய்யப்படுவதால் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.3000 மதிப்புள்ள விமான டிக்கெட் ரூ.10,000-க்கு விற்பனை செய்யப்டுகிறது.
சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரத்துக்கான கட்டணம் ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வால் விமான பயணிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்றுத்தீர்ந்ததால் பல்வேறு நகரங்களுக்கு மக்கள் காரில் பயணம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தொடர் விடுமுறையையொட்டி ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவுகள் அனைத்தும் காலியாகியுள்ளது.