கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் தமிழ் மகளிர் வித்தியாலயத்திற்கு சிங்கள அருட்சகோதரி ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாணவிகளும் ஆசிரியர்களும் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அதிபராகக் கடமையாற்றும் குறித்த சிங்கள அதிபர் தமிழ் மொழி பேசத் தெரியாதவர் என்பதால், பாடசாலையில் நிர்வாக விடயங்களில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த அதிபரை எதிர்த்து நின்ற மாணவிகள் மற்றும் சில ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர் இது தொடர்பாக நியாயம் கேட்பதற்கு முன்வருவதில்லை என்றும் அவர்கள் அச்சமடைவதாகவும் மாணவிகள் கூறுகின்றனர்.
ஆகவே தமது அவல நிலையை உணர்ந்து தம்மைக் காப்பாற்றுமாறு மாணவிகள் வெள்ளிக்கிழமை துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அருகில் உள்ள சிங்களப் பாடசாலையுடன் இப்பாடசாலையையும் இணைக்கும் மறைமுக அரசியல் வேலைத்திட்டம் இடம்பெறுவதாகப் பொற்றோர் சிலர் கூறுகின்றனர்.
ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல பொது அமைப்புகளிடம் முறையிட்டாலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் மாணவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முதலாம் வகுப்பில் இருந்து கா.பொ.த உயர்தரம் வரை வகுப்புகள் உள்ளதாகவும், குறித்த சிங்கள அதிபரின் செயற்பாடுகளினால் மாணவிகள் பலர் விலகிச் சென்று வேறு பாடசாலைகளில் கல்வி கற்பதாகவும் பெற்றோர் சிலர் முறையிட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடு பாடசாலையை சிங்கள மயமாக்கும் நோக்கம் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை எனவும் மாணவிகளும் பெற்றோரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சிங்கள அதிபருக்கு அரசியல் செல்வாக்குகள் பக்கபலமாக இருப்பதாகவும், இதனை கொழும்பு பேராயர் இல்லம் பாராமுகமாகச் செயற்பட்டு வருவதாகவும் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் முறையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.