வாஷிங்டன், இந்தியாவில் சாதி ரீதியிலான பாகுபாடுக்கு, 1948-ல் தடை விதிக்கப்பட்டது. கடந்த 1950-ல் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டம் அந்த கொள்கையை நிலைநிறுத்தியது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் சாதி ரீதியிலான பாகுபாடுக்கு தடைவிதிக்கப்படவில்லை. அங்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சில இடங்களில் சாதி பாகுபாடு தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் பிற இடங்களிலும் சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்க ‘ஈக்வாலிட்டி லேப்ஸ்’ என்ற அமைப்பு அமெரிக்காவில் போராடி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சியாட்டில் நகரில் சாதி பாகுபாடுக்கு தடை விதிக்கும் தீர்மானம் நகர கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சியாமா சாவந்த் என்ற பெண் உறுப்பினர், “நகரில் பல்வேறு வகையிலான பாகுபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சாதி ரீதியிலான பாகுபாடும் இணைக்கப்பட வேண்டும்” என்ற தீர்மானத்தை நகர கவுன்சிலில் கொண்டு வந்தார். ஓட்டெடுப்பில் இந்த தீர்மானத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து, தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சாதி பாகுபாடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் அமெரிக்க நகரமாக சியாட்டில் உள்ளது.